இன்று பள்ளிவாயலை உடைக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்கின்றார்கள். இந்நாட்டில் பள்ளிவாயல்களை உடைத்தது புலிகள்தான் என்று அவர்களுக்குத் தெரியாதா? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டு. மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும்
வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் எம்.ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மேலும் உரையாற்றுகையில்;
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் புலிப் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் எத்தனையென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியுமா?
அரசாங்கம் பள்ளிவாயல்களை உடைக்கின்றது என்று கூறுபவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் நல்லது என்றும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து அரசாங்கம் கூடாது என்றும் பொய் சொல்வதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்று ஒன்றுக்கொன்று முரனான கருத்துக்களை வெளியிடுகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு வந்து சிங்களவர்கள் பள்ளிவாயல்களை உடைக்கின்றனர், சிங்களவர்களைப் போன்ற மோசமானவர்கள் இல்லை என்று கூறி விட்டு அநுராதபுரத்தில் விகாரைக்குப் பக்கத்தில் கூட்டம் நடத்தும் போது சிங்கள மக்களைப் போன்ற நல்லவர்கள் கிடையாது என்று கூறி முஸ்லிம்கள் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றனர்.
அநுராதபுரத்தில் வெற்றிலை நல்லது என்றால் அது எப்படி கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் கூடாமல் போவது என்று முஸ்லிம் காங்கிரஸ்காரர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

No comments:
Post a Comment