Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, September 20, 2012

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க இந்திய உச்ச நீதிமன்றில் ஜெயலலிதாக புதிய மனு


    1974 ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில்
புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து தான் பிரதமருக்கு எழுதிய கடிதங்களையும் அந்த மனுவில் இணைத்துள்ள ஜெயலலிதா, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

1974ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்தேன்.

மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பினை ஏற்றவுடன் கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன்வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, தன்னை ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்தினையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது.

இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை, அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்து உள்ளது.

இந்த தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல.

கச்சத்தீவு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சொந்தமானது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும், மீன் வலைகளை கச்சத்தீவில் உலர்த்தவும் உரிமை உண்டு. ஆகவே, தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதற்கு உதவும் வகையில் கச்சத்தீவு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மனுவுடன், கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு சார்பாக எழுதப்பட்ட 11க்கும் மேற்பட்ட கடிதங்களையும் ஆவணமாக எடுத்துக் கொள்ளும்படியும் இணைத்து உள்ளேன்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment