முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்டூன் படத்தை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்யாமல் உலக முஸ்லிம்களின் உணர்வுகளைபுண்படுத்திக் கொண்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
உலகின் பல பாகங்களிலும் எமது இஸ்லாம் மார்க்கத்தையும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நிந்தனை செய்து, இழிபடுத்தி, மோசமாக சித்தரித்து அடிக்கடி கட்டுரைகளும் கேலிச் சித்திரங்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிரான பெரிய சக்தி ஒன்று இயங்கி வருவதையே இச்சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் அந்த சக்தி இஸ்லாத்தை அழித்தொழிக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டாலும் கூட அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை. மாறாக இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.
தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருக்கும் கார்டூன் படமானது இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மிக மோசமான தாக்குதலாகும். எமது உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிர்வாணமாக சித்தரிக்கும் காட்சிகள் உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்துள்ளது. கடந்த இரு வார காலமாக உலகில் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாமல் அங்கும் இங்கும் மூளை முடுக்குகளிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையிலும் இடம்பெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்த சக்தியாக வீதியில் இறங்கி போராடுவதும் அதற்கு மாற்று மதங்களை சேர்ந்த சகோதரர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதும் அதற்கு இந்த நாட்டு அரசாங்கம் கூட ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கையான செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் எந்த நாடாக இருந்த போதிலும் ஜனநாயகம், மனித உரிமை மீறல், சட்டம் என்று சொல்லிக் கொண்டு- மூக்கை நுழைத்து சர்வதேச பொலிஸ்காரனாகவும் நீதிபதியாகவும் செயற்படுகின்ற அமெரிக்க வல்லரசு நிர்வாகம், தனது நாட்டில் இடம்பெறுகின்ற சட்டத்திற்கும் தர்மத்திற்கும் முரணான இத்தகைய படுமோசமான செயல்களை ஆதரித்து ஊக்குவித்து வருவதானது மிகக் கண்டனத்திற்குரிய விடயமாகும். இது எதிர்காலங்களில் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்விளைவுகளையும் அனர்த்தங்களையும் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆகையினால் உலக முஸ்லிம்களின் இதயங்களைக் காயப்படுத்தியுள்ள இப்படத்தை உடனடியாக தடை செய்வதற்கு அமெரிக்க நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
அதுவரை இதற்கெதிரான உலக முஸ்லிம்களின் பலமான போராட்டம் தொடரும் என்றும் அது இன்னும் பல விதங்களில் விஸ்பரூபம் எடுக்கும் என்றும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

No comments:
Post a Comment