கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்தை ஆதரிக்குமாறு தாம் அதன் எந்த உறுப்பினருக்கும் நியுயோர்கில் இருந்து குறுந்தகவல் எதனையும் அனுப்பவில்லை என்றும், அந்த தகவல் பொய்யானது என்றும் தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம், முதலமைச்சர் விவகாரத்தில்
பிந்திய இரண்டரை வருடங்களை கட்சிக்கு வழங்குவது என்ற உத்தரவாதத்துடன் சேதமில்லாத விட்டுக்கொடுப்பை செய்திருப்பதாகவும், கிழக்கில் திவிநெகும வாக்கெடுப்பில் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டவிதம் குறித்து தாம் நேர்மையான கோபத்தை அவர்களிடம் வெளிப்படுத்த நேர்ந்ததாகவும் கூறினார்.
சம்மாந்துறையில் திங்கள்கிழமை (22.10.2012) மாலை நடைபெற்ற மாகாண அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களின் வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹகீம் இதனைத் தெரிவித்தார்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர்சேகுதாவுத், கட்சியின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமத், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம். ஜெமீல், நசீர் ஆகியோரும் மூத்த பிரதித் தலைவர் அப்துல் மஜீத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்..
அமைச்சர் ஹக்கீமின் உரையின் போதுமேலும் தெரிவித்தவையாவன, சேதமில்லாத விட்டுக் கொடுப்பு, நேர்மையான கோபம் என்பன மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் உயர் பண்புகளாக விளங்கின என்பதை இன்று நல்லிரவின் பின் பிறக்கும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நினைவூட்டுவது பொருத்தமானது.
இவ்விருபண்புகளையும் நானும் இயன்றவரை கடைபிடித்து வருகிறேன். அண்மைக்கால சம்பவங்களைப் பொறுத்து இதனைத்தான் நான் ஆரம்பத்திலேயே எடுத்துக் காட்டுகளாக உங்கள் மத்தியில் முன்வைத்தேன்.
திவிநெகும வாக்களிப்புத் தொடர்பில் நானும், செயலாளர் நாயகமும், தவிசாளரும் அதில் பங்குபற்றிய எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதற்கான காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒருவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு கதையை கூட சொன்னார். அதுவும் சிங்கமொன்றின் கதை. நான் உங்களுக்கு தேர்தல் காலத்தில் கூறிய கிழட்டுச் சிங்கத்தின் கதையல்ல.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், தமிழர் ஊடகத்தினரும் இந்த அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் என்னை தாறுமாறாகவும், காரசாரமாகவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எதனையும் கூறுவதில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மூக்கணாங் கயிறு மாட்டி தாம் விரும்பும் திசையில் இழுத்துச் செல்ல எவருக்கும் எனக்கு இடமளிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்.
நான் நியுயோர்க்கில் இருந்த பொழுது, என்னை அங்கு சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், திவிநெகும சட்டத்தை ஆதரிக்க கூடாது என என்னிடம் கூறியதாக வார இறுதி சிங்களப் பத்திரிகை யொன்று பொய்யான செய்தி யொன்றை பிரசுரித்திருப்பதோடு, நாடு திரும்பும் வழியில் நான் லண்டனில் தமிழ் தீவிரவாதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் முற்றிலும் பிழையான செய்தியை வெளியிட்டு என்னைப் பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் தவறான கருத்தையும் மனப்பதிவையும் ஏற்படுத்த முயற்சித்தது. அவ்வாறு எவையுமே நடைபெறவில்லை.
எதிர்வரும் காலம் மிகவும் சவால்கள் மலிந்ததாக இருக்கும். மிகவும் நிதானமாகவும் சாணக்கியத்துடனும் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment