கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக மட்டக்களப்பு அல்லது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரே வருவார் என தான் நம்புவதாக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியை சுமார் நான்கரை கோடி ரூபா செலவில் புனரமைக்கும் பணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது; “நான் முதலமைச்சராக இருக்கின்றபோது வீதிகளை ஆரம்பிப்பது பற்றி மிக நீண்ட பட்டியல் ஒன்று இருந்தது. நான் ஒரு கிழமைக்கு முன்னர் தேர்தலை நோக்கிய நகர்வொன்றை மேற்கொள்ளலாம் என்று கடிதம் கொடுத்திருந்தேன். இந்த மாதத்திற்குள் மாகாணசபை கலைக்கப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும்.
வீதிப் புணரமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் வாய்ப்பிருந்தது. புளியந்தீவிலும் பல குறைபாடுகள் இருந்தன.
தற்போது புளியந்தீவில் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நடக்கவிருக்கின்றன. நாங்கள் நீண்ட காலமாக யுத்தம் செய்ததன் காரணமாக பல அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்ததே இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது.
தேர்தலுக்கு முன்னர் இங்கிருக்கின்ற பிரதான வீதிகளை கார்ப்பெட் இடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தேர்தல் ஆரம்பித்தாலும் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும். நிச்சயமாக புளியந்தீவு ஒரு அழகான இடமாக மாறும். மட்டக்களப்பு வரைபடத்தை கருதும்போது புளியந்தீவு தான் அழகிய இடமாக காணப்படுகின்றது. முடிந்தவரை கடந்த நான்கு வருடத்திற்குள் நாங்கள் பல வேலைகளை செய்திருக்கின்றோம். அபிவிருத்தியில் நான்கு வருடம் என்பது ஒரு சிறிய காலப் பகுதியாகும். நிறைய விடயங்களை செய்ய முடியாது.
நான் 2013ஆம் ஆண்டு தான் தேர்தலை எதிர்பார்த்தேன். நான் புளியந்தீவில் ஒரு நூலகம் அமைப்பதற்கான அத்திவாரமிட்டேன். இந்த வருடத்திற்குள் அதற்கான பணிகளை முடித்துவிட்டு அதை ஒரு முதற்தர நூலகமாக அமைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற எதிர்பார்த்தேன். அது முடியாமல் போய்விட்டது.
எங்களுக்கும் சில் கற்பனைகள் இருக்கின்றது. அதற்கு வடிவம் கொடுப்பவர்கள் மக்கள் தான். செப்டம்பர் மாதம் நிச்சயமாக தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எவ்வாறு பங்களிக்கப் போகின்றீர்கள் என்பது முக்கியமான விடயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் முதலமைச்சர் என்பது உங்களுக்கு தெரிந்த விடயமாகும். முதலமைச்சர் பதவி திருகோணமலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. மட்டக்களப்பு முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வது மட்டக்களப்பு மக்களின் பொறுப்பாகும்.
யாழ் குடாவை விட இங்கு சிறந்த ஜனநாயகம் உள்ளது. அங்கு நடைபெறும் கொடுமைகள் போன்று இங்கு எதுவும் இடம்பெறுவதில்லை. அங்கு இன்னும் காசு பறிக்கப்படுகின்றது. ஆகக்கூடுதலான கற்பழிப்புக்கள் இடம்பெறுகின்றன. சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு பல பிரச்சினைகள் அங்குள்ளன.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் நிம்மதியாகவுள்ளது. உங்களுக்கு எதுவித தொல்லைகளும் இன்றி அரசியல் தலைமைகளும் தங்களின் வேலைப்பாடுகளை மேற்கொண்டு செல்கின்றனர். இந்த சந்தோசங்கள் எல்லாம் நாங்கள் எடுத்த முடிவுகளாலேயே ஏற்பட்டது. 2008ஆம் ஆண்டு நாங்கள் மாகாண சபையையாவது காப்பாற்றுவோம் என்று சென்றோம். ஓரளவு காப்பாற்றியுமுள்ளோம்.
இலங்கை வரலாற்றில் கிழக்கு மாகாண சபையில் நான்கு வருடம் முதலமைச்சராக இருந்து சாதனை படைத்துள்ளேன். அந்த பெருமை மட்டக்களப்பு மக்களுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் கிழக்கு மாகாண சபையில் இளம் வயதினராக இருந்து முஸ்லிம், சிங்கள தலைவர்களையும் வைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி செய்தோம். இன்று வரையில் முஸ்லிம் மக்களை புறக்கணித்தார் முதலமைச்சர், சிங்கள மக்களை புறக்கணித்தார் என்று கூறவில்லை. அனைவரையும் சமமாக நடத்தியுள்ளதுடன் அரசாங்கத்தையும் திருப்பதிப்படுத்தியுள்ளோம்.
அதனைவிட அரசாங்கம் மாகாண சபைகளை பலமிழக்கச் செய்வதற்கான பல சட்டமூலங்களை கொண்டு வந்தபோது அவற்றினை திருப்பியனுப்பியுள்ளோம். இறுதியாக நேற்று முன்தினமும் மாகாண சபை கலைக்கும் விடயத் தெரிந்த பிறகும் காணி திருத்தச் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனையும் நிறுத்தினோம்.
நாங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவிருத்தியையும் செய்து எங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளோம். இங்கு யாரும் ஜனநாயகவாதிகளல்லர். நாங்கள் துப்பாக்கி தூக்குவதற்கு வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்தவர்களே காரணம்.
தற்போதைய நிலையில் மாகாண சபையினூடாக தேசிய ரீதியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா? அல்லது வடக்கு கிழக்கை இணைக்க முடியுமா? அல்லது ஆட்சியை தீர்மானிக்கக் கூடியளவில் தமிழர்களின் வாக்குப்பலம் இங்கிருக்கின்றதா? ஒன்றுமேயில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த மாகாணத்தில் மூன்று கட்சி இருப்பதாகவும் அதில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணையாது எனவும் நாங்கள் சேர்ந்து முதலமைச்சர் ஆகுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். சிங்களவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஆட்சியமைப்போம். தமிழர்கள் எதிர்க்கட்சியில் இருங்கள் என்பதே அதன் கருத்தாகும்.
இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கிழக்கு மாகாணம் எப்படி அழிந்தாலும் பரவாயில்லை பிள்ளையான் அடுத்த முதலமைச்சராக வரக்கூடாது என்பதே சிலரின் தீராத அவாவாகும். அவர்களுக்கு நாங்கள் எதையாவது தன்னிச்சையாக சிந்தித்தால் அல்லது நியாயமாக இருக்கின்ற விடயங்கள் எல்லாம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பிழையாக இருந்தால் நாங்கள் துரோகிகள் என்பார்கள். நாங்கள் களமறிந்து எங்கள் மக்களுடைய மனநிலையறிந்து கடந்தகால அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்திய தலைவர்களை உணர்ந்து புறந்தள்ளிவிட்டு பணி செய்கின்றோம்.
நீண்ட வரலாற்றிலே இப்பொழுது தான் புதிய தலைவர்கள் கிழக்கிலிருந்து உதயமாகியிருக்கின்றார்கள். இப்பொழுது தான் வரலாற்றில் கிழக்கு மாகாணத்திற்கென்று ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் நல்ல விடயங்களாகும். நல்ல விடயங்களை நல்ல விடயங்களாக பேசுகின்ற மனப்பக்குவம் மாநகரத்திலிருந்து உருவாகும்பொழுது நிச்சயமாக மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் வரும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.
thankas Mertomirror.

No comments:
Post a Comment