அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச்சந்தைக் கட்டிடத்துக்கு அண்மையில் காலமான கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நினைவாக ‘மசூர் சின்னலெப்பை சதுக்கம்’ எனும் பெயரினைச் சூட்டுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த செவ்வாய்கிழமை சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் பிரதேச சபை காரியாலயக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே – பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார்.
இது தொடர்பில் உறுப்பினர் முனாஸ் மேலும் தெரிவித்ததாவது
மர்ஹும் மசூர் சின்னலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரக கடமையாற்றியவர். அவர் இந்த ஊரின் அபிமானத்தை பெற்றவர். மக்களால் நேசிக்கப்படும் நல்ல மனிதர். நமது ஊருக்காகவும், கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்தவர்.
மர்ஹும் மசூர் சின்னலெப்பை முஸ்லிம் காங்கிரசில் இணையும் பொருட்டு, அப்போது அவர் வகித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகண தவிசாளர் பதவியை தூக்கி வீசிவிட்டு வந்ததை நாம் மறந்துவிட முடியாது.
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருந்த காலகட்டங்களில் அவற்றினை முறியடித்து, தைரியமாக கட்சிப்பணி செய்துவந்த மசூர் சின்னலெப்பையின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
எனவே, அன்னாரை நினைவு கூறும் பொருட்டும், அவருக்குச் செய்யும் சிறிய நன்றி கடனாகவும் அவரின் நாமம் நிலைத்திருக்கும் வகையில் நாம் ஏதாவது செய்தல் அவசியமாகும்.
அதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச சபை மூலம் அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச்சந்தைக் கட்டிடத்துக்கு ‘மசூர் சின்னலெப்பை சதுக்கம்’ என பெயர் சூட்ட வேண்டுமெனும் விருப்பத்தினை இந்த சபையிலே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment