அரசுடன் இருக்கின்றோம் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் எமது பக்க நியாயங்களை மதித்து சாதகமாகச் செயற்பட்டால் மாத்திரமே அரசுடன் இணைந்து போட்டியிடுவது பற்றி சிந்திக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் தெஹியத்த கண்டியில் வியாழக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்புகளை அமைக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில், பல்வேறுபட்ட வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தான் இன்று நான் இங்கு வந்துள்ளேன். கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தலொன்று நடைபெறவிருக்கும் நிலையில் அதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்படி செயற்படப்போகிறது என்பதை நாடு உன்னிப்பாக அவதானித்து வருவதை நான் உணர்கின்றேன்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்தது. அங்கு பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டன. அதனடிப்படையில் நேற்று முன்தினம் நான் ஜனாதிபதியை சந்தித்து நிறையப் பேசியுள்ளேன். எமது பக்க முஸ்லிம்கள் தரப்பு நியாயங்களை நான் விரிவாக அவரிடம் எடுத்துரைத்துள்ளேன். அவரும் அவற்றை பொறுமையுடன் செவிமடுத்தார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று அரசிடம் கையளித்திருக்கின்றோம். அதனடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலிலேயே எமது முடிவு தங்கியிருக்கின்றது.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும் நாம் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகின்றோம்.
இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மீண்டும் கூடுவதற்கு முன்பாக இன்னொரு தடவை ஜனாதிபதியையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்க விருகின்றேன்.
அரசாங்கத்தைப் பாதுகாப்பதை விடவும் எனது சமூகத்தின் பாதுகாப்பும் இருப்பும் தான் எமக்கு முக்கியமானது. கிழக்கு தேர்தல் தொடர்பில் எமது முடிவு மக்கள் சார்ந்ததாகவே அமையும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

No comments:
Post a Comment