(கல்முனை செய்தியாளர்)
கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான தேவை தற்போது உணரப்பட்டுள்ளதனால் அதற்கான முயற்சிகளில் உடனடியாக நான் இறங்குவதற்கு இருக்கின்றேன் என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான பி.எச். பியசேன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (10.07.2012) கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,
கல்முனைப் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு என இருகட்சிகள் இருக்கின்றன. ஆனால் எவரும் மக்களுக்கு என்ன தேவை என்பதை இனம்கண்டு சேவையாற்றவில்லை. மக்களுக்குள்ளே இருந்து மக்களுக்கு சேவை செய்பவர்கள் இனம்காணப்படவேண்டும். அப்போதுதான் இந்த பகுதியில் இருக்கின்ற பிரச்சினைகள் இனம் காணப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படும். வெறுமனே உரிமைக் கோசங்களால் எமது மக்கள் தேவைகள் நிறைவேறப்போவதில்லை.
அதிகரித்த மக்கள் தொகையைக் கொண்ட கல்முனைப் பிரதேசத்தில் எமது தமிழ் உறவுகளுடைய தேவைகளை இனம்கண்டு நிறைவேற்றுவதற்கு தனிப்பிரதேச சபை ஒன்றை நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் உறவுகளின் அதிகரித்த வேலைப்பழுக்களுக்குள் நாமும் சேர்ந்து கொண்டிராமல் தனியே எமது பிரதேசத்தின் விடயங்களை நாம் பார்த்துக் கொள்ள முடியும். இந்த முயற்சிக்கு சிங்கள, முஸ்லிம் உறவுகள் ஒருபோதும் தடையில்லை. நமது தமிழ் மக்களே இதற்கு எதிரானவர்கள். நான் ஒரு முயற்சியை செய்ய எத்தனிக்கின்றபோது அதற்கு தடையாக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலை தொடருமானால் தொடர்ந்தும் எமது பிரதேசம் அபிவிருத்தியில் பின்னோக்கியே செல்லும். இதனை தவிர்த்து எனது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
எமது பகுதிகளில்பல்வேறு துறைகளிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. குருந்தையடி மாடிவீட்டுத்திட்டத்தில் சுகாதாரப் பிரச்சினை உள்ளது. நீர்ப்பிரச்சினை என பல பிரச்சினைகள் இருக்கின்றது. இதனை எனக்கு எழுத்து மூலம் தந்தால் அதனை பாராளுமன்றிலே சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி நிரு பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தருவேன். எனவும் கூறினார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் முஸ்லிம் பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment