Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, August 24, 2012

பிரதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பசீர் சேகுதாவுத் வெளியிட்ட ஊடக அறிக்கை


-நமது செய்தியாளர்-
கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், அரசாங்கத்தில் வகிக்கும் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (23.08.2012) காலை அனுப்பிய அதே நேரம், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆழ்ந்த சிந்தனையின் பின் பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்ய மனச் சாட்சியின்படி முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவூத்,
இராஜினாமாச் செய்வதனூடாக, அரச வளங்கள் பாவிக்கப்படாத, தூய்மையான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக, எதிர்வரும் கிழக்கு மாகாணச் சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த இராஜினாமா முடிவு, சமுதாயத்தையும் கட்சியையும் விட்டு விலகி, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியைப் பெறுகின்ற நோக்கமற்றவர் எனத் தன்னை நிரூபிக்கும் எனத் தான் நம்புவதாகவும், தனது ஸ்தாபன ரீதியான அரசியல் நம்பகத் தன்மையையும், கட்சிக்கான தனது பங்களிப்பின் பெறுமானத்தையும் நிலை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையாலும், பிரதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை பிரதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பசீர் சேகுதாவுத் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பிலான கட்சிக் கலந்துரையாடல் நடைபெற்ற போது ஒன்றில் அரச கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லாவிடின் எதிரணிக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் அப்போதுதான் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்த்தை நிரூபிக்கும் வகையில் கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நான் வாதிட்டிருந்தேன்.
அதுமட்டுமன்றி தனித்துக் களத்தில் இறங்குவதாக இருந்தாலும் நாம் வகிக்கும் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு, தூய முஸ்லிம் காங்கிரஸாக கிழக்கில் போட்டியிட்டு முஸ்லிம்களுக்கு எந்தத்தடையும், அப்பழுக்கும் அற்ற உரத்தொலிக்கும் குரலாக மத்திய அரசாங்கத்திலும், மாகாணத்திலும் நாம் விளங்க வேண்டும் என்ற கருத்தையும் முன்மொழிந்திருந்தேன்.
இந்த வாதங்களுக்கும் முன்மொழிவுக்கும் அமைய தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை, என் மனச்சாட்சி நடத்திய போராட்டத்தின் முடிவாகவே எனது பிரதியமைச்சர் பதவி ராஜினாமா அமைந்திருக்கிறது.
அகமாகவும் புறமாகவும் நான் பதவியாசை கொண்டவன் என்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக முயற்சிக்கிறேன் என்றும் எனக்கெதிரான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டிருப்பதால், நான் அப்படியானவன் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பதவிகளை மட்டும் பற்றிய பிரக்ஞையுள்ளவன் என்ற பிரச்சார சிறைக்குள்ளிருந்து என்னை விடுவிக்கும் கடப்பாடும் எனக்கிருக்கிறது.
நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெறுவதாக இருந்தால் அப்பதவியை 2010 நவம்பரில் அரசுடன் இணைகின்ற வேளையில் பெற்றிருக்க முடியும். தலைவரை விட்டுவிட்டு கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து அப்பதவியைப் பெறுமாறு கோரப்பட்ட போதும் நான் அவ்வாறு செய்யவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பிரதி அமைச்சர் பதவி ஒன்றை 1994 இல் ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு வழங்குவதாக இருந்த நிலையில் கூட அதை நான் நிராகரித்திருந்தேன். ஏனெனில் தமிழ் மக்களுடைய அனுசரணையுடனேயே அன்று நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றிருந்தேன். போராட்டத்திற்கு ஆதரவான மன நிலையில் இருந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது எந்த வகையிலும் நியாயமற்றது என்ற எனது மனசாட்சியின் அடிப்படையிலேயே அதை நான் நிராகரித்திருந்தேன்.
1990 களில் ஏற்பட்ட வன்முறையின் வெளிப்பாடுகளும், அரசியல் புரிந்துணர்வின்மையும் தொடர்ந்தும் தமிழ் தேசிய அரசியல் செய்ய முடியாத நிலைக்கு என்னைத் தள்ளியது. ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மறுத்த நான் தமிழ் தேசிய அரசியலில் இருந்து வெளியேறி முஸ்லிம் தேசிய அரசியலில் ஈடுபடும் அவாவோடு, மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களது தலைமைத்துவத்தை ஏற்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டேன். அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டதை அமைச்சர் பதவிகளை விட இன்றும் பெருமையாகக் கருதுகிறேன்.
2007 ஆம் ஆண்டு கட்சியின் முடிவுக்கமைய நான் வகித்த அமைச்சரவை அந்தஸ்தற்ற மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளின்போது நமது கட்சியின் இருப்பைப் பாதுகாப்பதற்காகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தை நிலைநிறுத்துவதற்காகவும் அன்று நான் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தலைவருடனும், செயலாளர் நாயகத்துடனும் சேர்ந்து உதறிவிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன்.
தலைவரும், செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆனபோதிலும் நான் தொடர்ந்தும் பாராளுமன்றத்தைவிட அதிகாரம் குறைந்த மாகாணசபையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தேன். தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றம் வரவேண்டும் என்று மனசாட்சியின் படி அன்று முயற்சிக்கவில்லை.
என்னுடைய அரசியல் வாழ்வு பாராளுமன்றத்தில் இருந்து அன்றி காடுகளுக்குள் கல்லும் முள்ளும் நிறைந்த கடூரப் பாதையில் இருந்தே ஆரம்பமானது. அங்கே வெயில் மழை பாராது கண்ணீரும், வியர்வையும், இரத்தமும் சிந்துகின்ற புரட்சிகர அரசியலில் எனது இளமைக் காலங்களைத் தொலைத்திருந்தேன். பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றமை ஒரு தற்செயலான நிகழ்வாகும். எனது புரட்சிகரமான அரசியற்பாதையில் பாராளுமன்றப் பிரவேசம் நிகழ்ந்த 1989 தொடக்கம் இன்றுவரையான காலகட்டத்தை ‘ஒரு இடைப் பாதையில் நடைபோடும் ஒரு பயணம் என்றே கருதுகிறேன். புதவிபெறல் மற்றும் இராஜினாமாச் செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவைரயில் கடந்த 12 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் சேர்ந்தே இயங்கியிருக்கிறேன்.
மேலும் தற்கால அரசியலில் ஆளும்கட்சி, பட்டம், பதவி என்பனவெல்லாம் வெறும் தெரிவுகள் மாத்திரமே என்பது எனது நம்பிக்கையாகும். மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்பு விஷேடமாக வடக்கும் கிழக்கும் பிரிந்ததன் பின்பு, மக்களுக்கான அதிகாரம் என்பதைவிட பிராந்தியத்துக்கான அதிகாரம் மேலோங்கி காணப்படுகின்ற நிலைமையை உள்வாங்கியவனாக, புதிய அரசியற் சூழ்நிலைக்கேற்ப என்னைத் தகவமைத்துக் கொள்ள எனது இந்த இராஜினாமா உதவும் என நம்புகிறேன்.
அத்துடன் முஸ்லிம் தேசிய அரசியலில் எந்த அதிகாரச் சார்புமற்று சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட எனக்கு இந்த இராஜினாமா வாய்ப்பளிக்கும் எனவும் நம்புகிறேன்.
தற்போதைய அரசாங்கத்தில் எனக்குப் பிரதியமைச்சர் பதவியை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இதுவரை காலமும் எனக்கும் பொதுவாக நாட்டு மக்களுக்கும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களக்கும் ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களுக்கும், எனது அரசியற் கருத்துக்களை நம்பியிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment