Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 29, 2012

சூடுபிடிக்கும் பள்ளிவாசல் அரசியல். – சிந்திக்கத் தவறும் முஸ்லீம் தலைமைகள்.


இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் இன்னும் சில மாகாணங்களிலும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சந்தர்பத்தில் மற்ற பகுதிகளை விட கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளதை அன்றாடம் அவதானிக்க முடிகின்றது.
தேர்தல் கூட்டணி விஷயத்தில் ஆரம்பம் முதல் இழுபறியாக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்தது. கிழக்கில் முஸ்லீம் காங்கிரசுக்கு இருக்கும் ஒரளவு பலத்தை முடிந்த வரை காட்ட வேண்டும் என்பதே தற்போது காங்கிரசின் கட்டாய கடமையாகிவிட்டது.

இதே போல் தமிழர்களிடம் தங்களுக்கு இருக்கும் ஓரளவு பலத்தை நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனித்துப் போட்டி என்ற நிலையை இந்தத் தேர்தலிலும் கையிலெடுத்தது.
இது தவிர்த்துமுள்ள மற்ற சில கட்சிகள் வழமை போல் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிடுவது என்ற முடிவை ஏழவே எடுத்துவிட்டன. அமைச்சர் ரிஷாத், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதாவுள்ளாஹ், பைசர் முஸ்தபா போன்றவர்கள் இம்முடிவை எடுத்துள்ளார்கள்.
அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசாங்க மற்றும் அரச ஆதரவு அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் ஒரு பக்கம் அரசை எதிர்த்து களத்தில் நிற்கும் SLMC மற்றும் த.தே.கூ போன்ற கட்சிகள் மறுபக்கம் என்று கிழக்குத் தேர்தல் பிரச்சாரக் களம் ஆட்டம் கண்டு வருகின்றது.
சூடு பிடித்துள்ள பள்ளிவாசல் அரசியல்.
கடந்த தேர்தல்களில் அரசாங்கத்தின் முக்கிய வாக்கு வங்கியாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் வெற்றியே பேசப்பட்டது. த.தே.கூட்டமைப்பு போன்ற இனவாதக் கட்சிகள் தங்கள் இனப்பற்றை வைத்து அரசியல் நடத்தின.
நாடு முழுவதும் அரசாங்கத்தின் வெற்றி தீர்மானமானதற்கு முக்கிய காரணமாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசு கண்ட வெற்றியே பேசப்பட்டது. இருப்பினும் இந்தத் தேர்தலில் அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுக்கெதிரான வெற்றிப் படலம் சாதகமானதாக இல்லை.
காரணம் புலிகளை வென்றதின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஆளும் அரசினால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சில பெரும்பான்மை மக்கள் முன்னெடுக்கும் செயல்பாடுகளை தடுக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்களில் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளமையே இதற்கான காரணமாகும்.
இருந்தாலும் கிழக்குத் தேர்தல் களத்தில் இரு தரப்பாளும் பள்ளிவாசல் அரசியல் நடத்தப்படுவதை தெளிவாக நாம் அவதானிக்க முடிகின்றது.
பள்ளிவாசல்களுக்கு இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு இல்லையென்று அரசாங்கத்திற்கு எதிரணியில் இருப்பவர்களும், இந்த அரசின் ஆட்சியில் தான் பள்ளிகள் பாதுகாக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சியினரும் பிரச்சாரம் செய்வதை பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் இந்த தேர்தலின் பேசு பொருளாக மாறியிருப்பது பள்ளிவாசல் அரசியல் தான்.
உண்மையில் இலங்கையின் தற்போதைய நிலையில் கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் இங்கு நோக்கத்தக்கதாகும்.
தம்புள்ளை பள்ளியில் இருந்து ஆரம்பமான பிரச்சினை, குருனாகல, தெஹிவலை என்று பரிணாமம் பெற ஆரம்பித்தது.
இதைத் தொடர்ந்து ‘தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்’ என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் மிரட்டல் விடுத்தமை.
 புனித ரமழானில் தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் போராட்டம் நடத்தியமை.
கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை.
கொழும்பு – 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு ரஷ்ய தூதுவராலயத்தின் கட்டடத்தை நிர்மாணிக்க அரசு எடுத்து வரும் முனைப்புகள்.
ராஜகிரிய கிரிடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமை.
திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக் கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமை. 
கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் புதிதாக புத்தர் சிலைகளை அமைப்பது, மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற விடாமல் தடுப்பது.
சன்னாரி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை.
மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை.
புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமை.
 ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்’ என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சூடு பரக்கும் அறிக்கை.
தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் ‘கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்  என்ற பொய்க் குற்றச் சாட்டை சுமத்தியமை.
முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்’ என்ற வரிகளுடன் தமிழினவாதிகளினால் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்.
இவ்வளவு பிரச்சினைகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடை பெற்றும் ஆளும் அரசாங்கமோ அல்லது அதற்கு எதிரான கட்சிகளோ இவற்றை ஒரு பொருட்டாக கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாறாக ஒருவர் மீது மற்றவர் குறை சொல்வதில் மாத்திரம் குறியாக இருக்கிறார்கள்.
தேர்தலில் தான் நாங்கள் எதிருக்கு எதிராக நிற்கிறோம், தேர்தலின் பின் அரசாங்கத்துடன் தான் கைகோர்ப்போம் என்ற முஸ்லீம் காங்கிரசின் அறிக்கையும், இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிக்கும் பாதிப்பு வந்ததில்லை என்ற ஜனாதிபதியின் அறிக்கையும் தொடர்ந்தும் முஸ்லீம் சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகத் தான் இருக்குமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
மொத்தத்தில் கிழக்குத் தேர்தலில் “பள்ளிவாசல் அரசியல்” நன்றாகவே சூடு பிடித்துள்ளது என்பது மாத்திரம் தெளிவான உண்மை.
கிழக்கில் “முஸ்லீம் முதலமைச்சர்” கனவு தொடர்ந்தும் கனவாகத் தான் இருக்கப் போகிறதா? என்ற பயம்  கிழக்கின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அனைவருக்குள்ளும் ஆசுவாசமாக நுழைந்திருக்கிறது.   
எது எப்படியோ இம்முறையும் முஸ்லீம்களின் வாக்குகள் பல திசைகளிலும் சிதையப் போகிறது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

thanks Rasminmisc.com

No comments:

Post a Comment