TM
ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்க அதிகாரமில்லை என புலம்பிக் கொண்டு திரிந்த முன்னாள் முதலமைச்சர் இம்முறை தேர்தலில் எதற்காக போட்டியிடுகின்றார் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்: “கிழக்கு மாகாண சபையை எங்களது கையில் வைத்திருப்பதற்காகவும் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு நாங்கள் சேவையாற்றி வருவதற்காகவும் இந்த தேர்தலிலே எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது.
இங்கே ஒரு கேள்வி வைக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு கோருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் கிழக்கு மாகாண சபையில் போட்டியிடுகின்றது. அது வடக்கு கிழக்கு இணைப்பை கேட்டுக் கொண்டிருகின்றது. ஏன் அவர்கள் தனியாக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட வேண்டும். நியாயமான கேள்வி.
நாங்கள் கடந்த முறை போட்டி போடாத படியினால்தான் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் முதலமைச்சரானார். ஆனால் அந்த வகையிலே எல்லோரும் தமிழ் மக்கள் தமிழ் முதலமைச்சர் வரவேண்டும் என்ற ஆவாவில் அவருக்கு வாக்களித்து முதலமைச்சராக்கினார்கள்.
ஆனால் நடந்தது என்ன என்றால் அவர் முதலமைச்சர் என்ற பதவியை ஜனாதிபதி அவர்கள் அவரிடம் கையளிக்கும் போது அதற்கான பத்திரத்தை வாசிக்காமல் பார்த்து விட்டு அவரிடமே கையளித்து விட்டார். ஏனெனில் அவர் ஓர் தலையாட்டு பொம்மை.
முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றதுடன் இந்துவாக இருந்தால் அல்லது கிறிஸ்தவராக இருந்தால் தமது மதத் தலைவரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். ஆனால் இவர் முதலாவதாக தலதாமாளிகை பௌத்த பிக்குவின் காலில்தான் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். நீங்கள் தலைமை தாங்குகின்ற உங்களது அசீர்வாதம் பெற்ற இந்த அரசாங்கத்தின் விசுவாசியாக இருப்பேன் என்று உறுதியளித்தார். இவர்தான் கிழக்கு மாகாண சபையிலே வந்த முதலமைச்சர் பிள்ளையான்.
வடக்கு கிழக்கு இணைப்பே இவ்வாறான கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் திட்டமிட்டு பிரிப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய ஒரு முதலமைச்சர் ஒரு பொம்மையாக இருந்ததால் எங்கள் மக்களை நியாயமான முறையிலும், நீதியான முறையிலும் வழி நடத்தக் கூடியவராக இல்லாமையால் தமக்குரிய அதிகாரத்தை தாமே பெற்று மக்களை வழிப்படுத்த முடியாத படியினால் அவர் இங்கு பலவிதத்திலும் பெரும்பான்மை இனத்தை வலுப்படுத்தும் ஒருவராக செயற்பட்ட படியினால் இந்த கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண இணைந்த மாகாணத்தை கோரி நிற்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் காரணம் முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மாகாணம் மாத்திரத்தை தனிமைப்படுத்தி தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக் கொள்ளையிலே அறிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பை பகிரங்கமாக வெறுக்கின்றேன் கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்று கோரிய காரணத்தினால் அவர் முதலமைச்சராக வரக்கூடிய தகுதியில்லாத நிலையில் இந்த கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை தற்காலிகமாக தக்கவைத்து இந்த வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்காலிக ஏற்படாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.
ஒரு சிற்றூழியரை கூட நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை கிழக்கு மாகாண சபையிலே ஆளுநனரின் ஆதிகாரம் தான் அதிகமாகவுள்ளதாக அடிக்கடி கூறிக்கொண்டு திரியும் பிள்ளையான் ஏன் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும்?
பிள்ளையானின் ஆட்சிக் காலத்தில் வாகரைப் பிரதேசதம் ஜனாதிபதியின் கையிலே ஈடுவைக்கப்பட்டது. உலகத்திலே ஆதிவாசி மக்கள் அழிக்கப்படுகின்றார்கள் இவர்களை பாதுகாக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எடுத்தது. அதற்காக பெருந்தொகை நிதிகளை வழங்கக் கூடிய சூழ்நிலை இருப்பதாக நாட்டின் ஜனாதிபதி அறிந்து ஆதிவாசி மக்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை யோசித்தனர்.
எமக்குத் தெரிந்தவரை மகியங்கனையைத்தான் வசிக்கிறார்கள். ஆனால் இங்கிருந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியம் அவர்களும் சேர்ந்து இந்த அதிவாசி மக்கள் தான் வாகரைப் பிரதேச மக்கள் என்று ஜனாதிபதிக்கு கூறியதன் நிமிர்த்தம் சென்ற வருடம் சல்லித்தீவிலே ஆதிவாசிகள் நிகழ்வு நடைபெற்றது.
அதிவாசிகள் என்று வாகரைப் பிரதேச மக்களை பிரகடனப்படுத்துகின்ற அந்த நிகழ்வுக்கு முன்னாடி ஜனாதிபதி செயலகத்தால் வந்து பிரதேச செயலகத்திலே எங்களது பதிவுகளை மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இந்த பதிவுகளிலே இலங்கைத் தமிழர் என்றுதான் எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் அந்தப் பதிவுகளை எவ்வாறு மாற்றச் செய்தார்கள் என்றால் இந்த ஆதிவாசி மக்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம், கிணறுகள் கட்டிக் கொடுப்போம், மலசல கூடங்கள் கட்டிக் கொடுப்போம் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதை வெட்டிவிட்டு வேடர்கள் என்று குறிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். நாற்பத்தி ஏழு பேர் வாகரைப் பிரதேசத்திலே தாங்கள் இலங்கைத் தமிழர் என்பதை வெட்டி நாங்கள் வேடர் என்று குறித்தார்கள். இதை அறிந்த நான் பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு உடனடியாக நிறுத்தினேன். வாகரைப் பிரதேச மக்களை எவரையும் அங்கே நீங்கள் ஆதிவாதி மக்கள் என்று பிரகடனப்படுத்த முற்படும் போது நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
ஜனாதிபதியின் இருந்து ஒரு தொகைப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் இருவரும் எங்களது வாகரைப் பிரதேச மக்களை வேடர்கள் என்று பெயர்மாற்ற முற்பட்டு இருக்கின்றார்கள். எங்கள் மக்கள் பூர்வீகமாக நாங்கள் இலங்கையிலே எல்லோரும் ஆதிவாசிகளாக இருந்துதான் வளர்ந்து வந்தவர்கள். எங்களுக்கு சீல் குத்த வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் மக்கள் இப்போது கொத்துக் குலைகளோடும், அம்பு வில்லுகளோடும் திரியவில்லை. அவர்கள் வளர்ச்சி கண்டு ‘மடி கணனியுடனும்’; ‘ஐ பாட்’ கொண்டு திரிகிறார்கள். நாங்கள் பல விதத்தில. முன்னேறி நிற்கின்றோம். எங்களை இன்னும் கீழ் நிலைமைக்கு கொண்டு செல்ல ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளiயானும் பிரதியமைச்சர் கருணாவும் இருக்கும் போதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த சிற்றுழியர்கள் நியமிக்கப்பட்டார்கள் இதை நாங்கள் தட்டிக்கேட்டோம் பிள்ளையானோ, கருணாவோ தட்டிக் கேட்கவில்லை அமைதியாக இருந்தார்கள். நிர்வாக சேவை என்றால் நாங்கள் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. அதிலே முற்றுமுழுதாக சிங்கள மக்களையே தெரிவு செய்தார்கள். அதற்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக இன்று ஒன்பது தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் இன்னும் நாற்பத்தேழு பேர் தெரிவு செய்யப்பட இருகின்றார்கள்.
பிள்ளையானின் ஆட்சிக் காலத்தில்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலே இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் காணிகளை சிங்கள ஊர்காவல் படைகளுக்கு இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆளுநர் அனுமதியளித்துள்ளார்;. அதற்கு கையொப்பமிட்டது முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா கம்பிகள் கொடுத்து வேலிகள் அமைக்க நடவடிக்கையெடுத்தார்.
எமது வாகரைப் பிரதேசத்திலே கிருமிச்சைப் பகுதியிலே 1200 ஏக்கர் நிலம் கடற் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கும் இவர்கள் இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலத்தில் கடற்படையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் போகின்றார்கள் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் சிங்கள மயமாக்கப் போகிறார்கள் இதற்கு நம்மவர்கள் துணை போகிறார்கள்.
அண்மையில் வாகரைப் பிரதேசத்தில் பிள்ளையான் யோகேஸ்வரன் எம்.பி. ஆயுதம் தூக்கியவரா? போராடியவரா? என்ன கணக்கிலே அவர் தமிழ் தேசியம் பற்றி பேசி வருகின்றார் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே நான் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனால் தர்மத்தில் வழியில் போராடியவன் நீங்கள் ஆயுதம் தூக்கி போராடியதன் பயன்தான் என்ன? நீங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்கை நடத்துகிறீர்கள்!
உங்கள் தேவைக்காக பலாஷ்காரமாக வீடு வீடாக அடித்து இழுத்துச் சென்ற இளைஞர் யுவதிகள் மரணக் குழியல் இருக்கின்றார்கள். கணவனை இழந்த இளம் விதவைகளும் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோருகள் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை உருவாக்கியவர்கள் கருணாவும் பிள்ளையானும்! இவர்கள் இருவரும் எந்த முகத்தோடு எமது மக்கள் மதியில் வாக்க கேட்டுவர முடியும்?
வாகரைப் பிரதேசத்திலே வீதிகளில் கிடந்த சடலங்களை நாங்கள் கண்டோம் கருணாவும் பிள்ளையானும் வந்து பார்க்கவில்லை. இந்த நிலையை உருவாகியது யார்? பிள்ளை கொடுக்கவில்லை என்று எத்தனை குடும்பத்தை அடித்து ஊரைவிட்டு விரட்டினார்கள்? இதையெல்லாம் வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் குழுக்கள் யாரும் செய்யவில்லை. இங்கிருந்த கருணாவும் பிள்ளையானும் இதையெல்லாம் செய்துவிட்டு எந்த முகத்தோடு எங்கள் முன் வாக்கு கேட்டு வருவார்கள்?
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக பிரான்ஸ் அரசினால் வழங்கப்பட்ட நிதியை வைத்து போடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலை இவர்களின் சொந்த பணத்திலா போடப்பட்டது கூறிக்கொண்டு திரிகிறார்கள். நாட்டினை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் கடமை அதை நிறைவேற்ற வேண்டும். முப்பது வருடமாக எதையும் செய்யவில்லை ஆகவே அவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கருணா அம்மானிடமும் பிள்ளையானிடமும் கேட்கின்றேன் யுத்தத்தின் பின் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளீர்கள்? இந்த பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களினால் கட்டப்பட்ட வீடுகளே இங்குள்ளன.
25 ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டிக்கொடுக்கப்படவில்லை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் இருந்து என்ன பயன்? நாங்கள் எதிர்கட்சியில் இருக்கிறோம் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து வரும் நிதிகளை கூட அரசாங்கத்தினுடாகவே வழங்க வேண்டும். இதை பெற்றுத் தருகின்ற தகைமை கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் உள்ளது ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்த வில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட வேண்டிய 745 மில்லியன் ரூபா நிதி இன்னும் கொடுக்கப்படவில்லை. இதைக்கூட வழங்காமல் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த போது என்னையும் அரசுடன் இணையுமாறு பேரம் பேசினார்கள் நானும் இணைந்திருந்தால் கருணா பிள்ளையானை விட பெரிய அமைச்சர்களாக இருந்திருப்போம். எனக்கு இந்து கலாசார அமைச்சு பெற்றிருப்பேன் சாராயக் கடைக்கு அனுமதி வழங்கியும் வேலைவாய்ப்புகளுக்கு பணம் பெற்றும் கோடி கோடியாக உழைத்திருக்கலாம். ஏன் இந்த அரசாங்கத்தின் பிச்சையை நாங்கள் ஏற்கவில்லை எமது மக்கள் இத்தனை வருட காலமாக பட்ட துன்பங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் எங்களுக்கு வாக்களித்தர்கள் இவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். என்றுமே மக்களோடு மக்களாக நின்று செயற்படுவோம்.
கருணாவாலோ பிள்ளையானாலோ அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமா? அல்லது எமது மக்களுக்காக எதையும் தட்டிக் கேட்க முடியுமா? அப்படி அவர்கள் ஏதாவது செய்தால் நாட்டை மீட்டவர் என்னு மகுடம் சூட்டிய பொன்சேகாவை ஜனாதிபதி கூட்டுக்குள் போட்டது போல் இவர்கள் இருவரையும் தள்ளிவிடுவார்.
இந்திய அரசாங்கத்தினால் வாகரைப் பிரதேச மீனவர்களுக்கு வழங்கப்பட்ட 17 படகுகள் இன்று யாரிடம் உள்ளது? மீனவ சங்கத்திடமா? இல்லை கிழக்கு மாகாண பிள்ளையானும் ஜெயமும் தங்களுக்கு விரும்பியவர்களிடம் வழங்கிவிட்டு அதிலிருந்து நிதி வசூலிக்கிறார்கள். பால்சேனை படகு 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருக்கிறது.
இம்முறை நடைபெறும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தமிழ் மக்களின் நியாயபூர்வ தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் தேர்தல். வெளிநாட்டு அரசாங்கங்கள் இன்று முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை நிருபிப்பதற்கும், தீர்பை நிருபிப்பதற்கும் வழங்குவதற்குமான தேர்தல்.
கிழக்கு மாகாணத்திலும் மனித உரிமை மீறல்கள் நடந்த வாகரைப் பிரதேசத்திலும் மக்கள் அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள் அந்த வேளை குண்டுகள் இங்கு கொண்டு விள வில்லையா? இங்கு பலர் இறக்கவில்லையா? பலர் அங்கவினர்களாக வில்லையா? இதை யார் செய்தார்கள்? இவை நடக்கவில்லையா? இவ்வாறானதொரு சம்பவமே நடக்கவில்லை என பிள்ளையானால் கூறமுடியுமா? நீங்கள் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
இன்று வெற்றிலைக்கு புள்ளடியிடுங்கள் என்று சொல்லும் அத்தனை பேரும் தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் எமது மக்கள் சரியாக சிந்திக்க வேண்டும் நாம் இத்தனை காலம் அனுபவித்த துன்பத்திற்கு பலனை பெற்றுத்தரும் காலம் கனிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அமோக வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களை விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment