அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பட்டதாரி பயிலுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக வாயிலின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த பயிலுநர்கள் சிலரின் பெயர்
- குறிப்பிட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு சில பயிலுநர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டமையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - அலுவலகத்திலிருந்து அம்பாறைக் கச்சேரிக்குச் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்ட வேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனத்தை மறித்து, தடுத்து வைத்தனர். இதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் - உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் வானம் செல்வதற்கு வழிவிடவில்லை.
பட்டதாரிகளை பயிலுநர்களாக சேர்த்துக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 140 க்கும் அதிமான பட்டதாரிகள் பயிலுநர்களாக இணைக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் பட்டதாரிகளை பல்வேறு அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதற்கிணங்க, கடந்த ஜுலை மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தில் வைத்து - பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்குரிய பட்டதாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சையொன்று நடைபெற்றுள்ளது.
அதனடிப்படையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்து 39 பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியலொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (18 ஆம் திகதி) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
அதில் 'பொருளாதார அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 19 ஆம் திகதி (இன்றைய தினம்) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், எனவே, கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட பட்டதாரிகளை, மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும்' அரசாங்க அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
நேற்றைய தினம், அரசாங்க அதிபர் அனுப்பி வைத்திருந்த பட்டியலில் 39 பட்டதாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்த போதும், முன்னதாக செப்டெம்பர் மாதம் அரசாங்க அதிபரால் அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 21 பட்டதாரிகளின் பெயர்கள் - நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு பட்டதாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
இவ்வாறு பெயர்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட பட்டதாரிகளும், அவர்களுக்கு ஆதரவான பட்டதாரிப் பயிலுநர்களுமே இன்றைய தினம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளாகத்துக்குள் தமக்கு நியாயம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாதிக்கப்பட்டாகக் கூறப்படும் பட்டதாரி பயிலுநர்கள் இருக்கத்தக்கதாக, பட்டியலில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் உள்ளிட்ட 605 பட்டதாரி பயிலுநர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment