Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, July 29, 2012

முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் கோசங்கள் பொய்யானவை: அ.இ.ம.கா பிரதித்தலைவர் நிஜாமுதீன்


 அஸ்லம் எஸ்.மௌலானா -
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அது முழுமையாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியாகவே இன்றும் காணப்படுகிறது. இந்நிலையில் இங்கு கட்சி வேறுபாடு பேசுவதும் உரிமைத்துவ அரசியல் என்று வாய் கிழியக் கத்துவதும் அபாண்டமான பொய்யாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
‘இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08 செப்டம்பர் 2012இல் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடக் கிடைத்தமை எனது அரசியல் தொடர்ச்சியில் கிடைத்துள்ள மற்றுமொரு வாய்ப்பாகும். அல்ஹம்துலில்லாஹ்!.
எனது அரசியல் பிரவேசம் கடந்த 1988இல் உருவான வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன ஆரம்பித்த ஒன்றாகும். அந்த வகையில் மாகாண சபைத் தேர்தலும் அதன் பிரதிநிதித்துவமும் எனக்கு புதிதானதல்ல.
அத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களுள் அதிகூடிய விருப்பு வாக்குகளை எனக்களித்து (17082) என்னை உங்களது முதன்மைப் பிரதிநிதியாக மாகாண சபைக்கு தெரிவு செய்தமைக்கான நன்றியினை நான் இன்றும் என் உயிரோடு சுமக்கின்றேன்.
அந்த விசுவாசத்தை தொடர்ந்து வந்துள்ள எனது அரசியல் பயணத்தில் எமது மக்களுக்காகவும் நமது மண்ணுக்காகவும் அர்ப்பணிப்புடன் வெளிப்படுத்தி நான் செயற்பட்டும் வருகின்றேன். அதனால் என்றும் நான் உங்கள் உள்ளத்தோடு நெருங்கி இருக்கின்ற ஒரு உடன் பிறப்பாகவும் என்னைக் காண்கின்றேன்.
1988களில் உணர்வுபூர்வமாகவும் உரிமைக் குரலோடும் வாக்களித்த மக்களை இன்று நாம் இழந்து விட்ட நிலையில் பணத்தினைக் கொண்டு அரசியலையும் தேர்தலையும் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்ற இத்தகைய சூழலில் எமது மக்கள் 1988களுக்குச் சென்று சிந்திக்க வேண்டிய ஒரு அவசியத்தை இங்கு நான் வலியுறுத்துகின்றேன். அவ்வாறு சிந்திப்பதன் மூலம்தான் முறையானவர்களை இந்த மாகாண சபைக்கு பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய முடியும்.
இவ்வாறான ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில்தான் இத்தேர்தலில் எமது அம்பாறை மாவட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் அரசின் நேரடிக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடுகின்றனர்.
இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அது முழுமையாக அரசு சார்ந்த நிலையிலேயே அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியாக செயற்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே இங்கு கட்சி வேறுபாடு பேசுவதும் உரிமைத்துவ அரசியல் என்று வாய்கிழியக் கத்துவதும் அபாண்டமான ஒரு பொய்யாகும் என்பதை நமது மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு இத்தேர்தலில் வாக்களிப்பதற்கான நியாயங்களை சிந்திக்க வேண்டும்.
கிழக்கில் தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வடமேல், சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளில் அரசாங்கத்தோடு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இத்தகைய அரசியல் மாயைகளைக் காட்டி அரசாங்கத்தின் நண்பர்களாக தலைவர்கள் இருந்து கொண்டு, கிழக்கு முஸ்லிம்களை அரசாங்கத்தின் எதிரிகளாக்குகின்ற சதி முயற்சிதான் இத்தேர்தலின் ஊடாக எமது மக்களுக்கு அரங்கேறப் போகிறது.
இந்த அரங்கேற்றம் எம்மை அலங்கரிக்கின்ற ஒன்றல்ல. எமக்குப் பேராபத்தான ஒரு விடயமாகும். இந்த ஆபத்தினைத் தடுக்கின்ற ஆயுதமாக எமது வாக்குகள் இத்தேர்தலில் இடப்படுவதுதான் நமது உண்மையான வெற்றியாகும்.
இத்தகைய உண்மையான வெற்றியை நாம் இத்தேர்தலில் அடைவதற்கு தனிக்கட்சி என்ற மாயைக்குள் இருந்து கொண்டு வாக்களிப்பதினால் நிச்சயமாகப் பெற முடியாது. அது மாத்திரமன்றி இங்கு தனிக் கட்சிகள் என்று எதுவுமில்லை. யாவும் அரசாங்க சார்புள்ள கட்சிகளாகவே உள்ளன.
எனவே கட்சிக்கு வாக்களிக்கின்றவர்களாக இல்லாமல் பொருத்தமான தகைமையும் ஆற்றலும் பெற்று எல்லா மொழிகளிலும் எமது மக்களின் பிரச்சினைகளை எல்லா இடங்களிலும் துணிச்சலாகப் பேசக்கூடிய வல்லமை கொண்ட அரசியல் அனுபவமிக்கவர்களை நீங்கள் இத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வதில் தான் நமக்கான ஆட்சியில் நாம் திருப்தி காணவும் வெற்றி காணவும் முடியும்.
கடந்த தேர்தலில் எமது மக்கள் கட்சி கட்சி என்று வாக்களித்து இத்தகைய தவறினைச் செய்ததினால் மாகாண சபை ஆட்சியின் கீழ் எமது பிரதேசம் பெரிதான எந்தப் பலன்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவான ஒரு உண்மையாகும்.
மாகாண சபையின் அதிகார எல்லைக்குள் எமது அன்றாட நிர்வாக அலுவல்கள் பல இருந்தும் அவற்றினை உரியவாறு நிவர்த்தி செய்வதில் எந்த மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்பு எமது மக்களுக்கு திருப்தியாகக் கிடைத்திருக்கின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்.
இதில் மிக முக்கியமாக ஆசிரியர் இடமாற்றத்தின் போது கைக்குழந்தைகளுடன் எமது ஆசிரியைத் தாய்மார்கள் துயருடன் அலைந்தபோதும் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்படாமல் தொடர்கின்ற அவல நிலை இன்றும் காணப்படுகிறது.
இப்படி மாகாண சபையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் நிர்வாகத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத மக்களாகவே நாம் இருக்கும்படி கடந்த எமது மாகாண சபை உறுப்பினர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் வேதனை தருகின்ற ஒரு விடயமாகும். அத்தகையவர்கள் யார் என்று மதிப்பீடு செய்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்ற ஒரு தேர்தலாகவும் மக்கள் இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் பெரும் தலைவர் அஷ;ரஃப் ‘கிழக்கு மாகாணத்தின் அரசியல் பலம்தான் இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பலமான ஒரு பாதுகாப்பை அளிக்கக் கூடியது’ என்று கூறிய கருத்தை நாம் தடம் புரண்டு விடாது நிலை நிறுத்துகின்ற ஒரு தருணமாகவும் இத்தேர்தல் எம்மக்கள் மத்தியில் ஒரு பலபரீட்சையாகவும் முன்நிற்கிறது.
சுயதேவை அற்றவர்களாகவும் மக்கள் தொண்டு புரிகின்றவர்களாகவும் காணப்படுபவர்கள் அரசியலில் மிகவும் அரிதாகவே உள்ளார்கள். அத்தகையோர்களை வாக்குகளால் தெரிவு செய்கின்ற சரியான சந்தர்ப்பங்களையும் எமது மக்கள் பொருத்தமான நேரத்தில் கைவிட்டு விடுகிறார்கள்.
தங்களது பைகளை நிரப்புகின்றவர்களாக இல்லாமல் மக்களின் மனங்களை நிரப்புகின்ற அரசியலை செய்கின்ற பொருத்தமான அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதன் மூலம் எமது மக்கள் நல்லதொரு அரசியலை இச்சந்தர்ப்பத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் மாகாண சபை என்பது வெறுமனே அபிவிருத்தியினை மட்டும் கொண்ட ஒரு இடமல்ல. அது சட்டம் இயற்றுகின்ற ஓர் அவையாகவுமுள்ளது. எனவே சட்ட அனுபவமும் சட்டக் கல்வியும் பெற்றவர்களின் அங்கத்துவம் மாகாண சபைக்கு மிக அவசியமானது என்பது ஒரு சமூகத் தேவை என்பதையும் எமது மக்கள் உணர வேண்டும்.
ஆகையினால்  மண்ணின் மரியாதையையும் மக்களின் மகிழ்ச்சியையும் காக்க பொருத்தமான வேட்பாளர்களை நோக்கி உங்கள் வாக்குகள் அளிக்கப்படட்டும். இது நீங்கள் மட்டும் வாழ்வதற்காக அல்ல! உங்கள் பரம்பரையும் வாழ்வதற்கு!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment