தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறி முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அரச கட்டிடத்தை தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பதாகவும் அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் தேர்தல் ஆணையாளர், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபர் கா. கனகசுந்தரம் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தேர்தல் ஆணையாரின் 30.06.2012 ம் திகதியிடப்பட்ட Pஊநுஃ2012ஃ04 இலக்கம் கொண்ட அரச மற்றும் அரச கூட்டுத்தாபன சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் ஏறாவூர் தபாலகத்தின் குடிமனையினை முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கையகப்படுத்தி வைத்திருப்பதோடு தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றார் என தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி ஏறாவூர் பிரதான தபாலகத்தின் மேல்மாடிக் குடிமனைக் கட்டிடத்தை 2006 ஆம் ஆண்டிலிருந்து அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்த எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் அவரின் ஆதரவாளரான எம்.எஸ். சுபைர் என்பவரும் பயன் படுத்;தி வந்தனர். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்ற எம்.எஸ். சுபைர் தனது பாவினைக்காக இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திவந்திருந்தார். தற்சமயம் மாகாண சபை கலைக்கப்பட்டும் குறித்த அரச கட்டிடத்தை அவர் தபால் திணைக்கள அதிகாரிகளிடம் மீள ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து அதனை தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பாவித்து வருகின்றார் என தபால் திணைக்கள அதிகாரிகள் முறையிட்டுள்ளனர். குறித்த கட்டிடத்தைப் பயன்படுத்துவதற்கான எந்த வித அனுமதியையும் தபால் திணைக்களம் வழங்கியிருக்கவில்லை என்றும் அதற்கு வாடகைப்பணம் செலுத்தப் படவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாடிக்கட்டிடத்தின் கீழ்ப்பகுதியிலேயே ஏறாவூர் அஞ்சலகம் இயங்கி வருகின்றது. மேல் மாடியில் அரசியல் நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அஞ்சலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களும் தபாலகத்திற்கு பல்வேறு அலுவல்களின் நிமித்தம் வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எனவே உடனடியாக இந்தக் கட்டிடம் தபால் திணைக்களத்திம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் பி. புவனசுந்தரம் தனது முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டிடம் பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் சுட்டிக்காட்டினார்.



No comments:
Post a Comment