கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை தொடர்ந்து கட்சியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று கொழும்பிலுள்ள ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக நோன்பு திறக்கும் வேளையில் இப்தாரைத் தொடர்ந்து இந்த நிகழ்வு அங்குள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைவர் அமைச்சர் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹஸனலி, எம்.பி, பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ். அஸ்லம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடந்தேறியது.
மூன்று மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் முஸ்லிம் மற்றும் சிங்கள வேட்பாளர்களும் அதில் கலந்து கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் அஸாத்சாலி, திருகோணமலையில் போட்டியிடும் ஹஸன் மௌலவி ஆகியோரும் பங்குபற்றினர்.
பிரஸ்தாப தேர்தலில் நடந்து கொள்ளக்கூடிய செயல்திட்டம் குறித்து கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விரிவான விளக்கமொன்றை அதன் போது அளித்துள்ளார். வேட்பாளர்கள் பலர் தமது அபிப்பிராயங்களை அங்கு தெரிவித்துள்ளனர். வெற்றிகரமான முறையிலும், தனிப்பட்ட வேட்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகளும், சர்ச்சைகளும் தோன்றாதவாறு வியூகத்தின் அடிப்படையில் செயல்படுவதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு கட்சியினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளுக்கான படங்களும் அன்றைய வைபத்தின் போது தனித்தனியாக பிடிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கும், அவர்களுடன் வந்திருந்த ஆதரவாளர்களுக்கும் இரவு உணவும் ‘தாருஸ்ஸலாமில்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

No comments:
Post a Comment