கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் புனித நோன்பு காலத்தில் ஒரு பெண்ணை கோடாரியினால் வெட்டி காய்யப்படுத்தியதுடன் உன்னிச்சை பள்ளிவாயலையும் தீ வைத்து எரித்த சம்பவமானது சகலரின் உள்ளங்களையும் காயப்படுத்தியுள்ளது என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
உன்னிச்சை சம்பவம் தொடர்பாக சல்மா ஹம்சா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உன்னிச்சையில் முஸ்லிம்கள் 1987ம் ஆண்டு இடம் பெயர்ந்த நாளன்று இடம் பெற்ற மிக கொடூரமான சம்பவம் போன்றே சனிக்கிழமை அதிகாலையும்
உன்னிச்சையில் கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளது. புனிதமான நோன்பு காலத்தில் இப் பெண் கோடாரியினால் தாக்கப்பட்டதுடன் உன்னிச்சை கிராமத்தின் ஜும் ஆ பள்ளிவாயலும் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.இச் சம்பவத்தை எந்த ஒரு மனித நேயமுள்ள சமூகமும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. யுத்தம் நிறைவடைந்து அமைதிச் சூழ் நிலை நிலவும் இக்கால கட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து காத்தான்குடியில் இருந்த போது சுனாமி அனர்த்தினாலும் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தமது சொந்த பூமியில் மீள் குடியேறி வசிக்க முற்படும் போது இதை தடுத்த நிறுத்த எடுக்கும் சதி முயற்சியாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவ்வறிக்கயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment