எமது பகுதியில் அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த மாகாண சபையில் இருந்தவர்கள் செய்தது தான் என்ன? சிங்கள ஆட்சியாளர்களின் மனங்கள் குளிர்ச்சி அடைவதற்காக எமது உள்ளங்களை காயப்படுத்தி துன்புறுத்தியது தான், இவ்வாறானவர்கள் இன்னமும் அக் கதிரைகளில் அமர்வது தகுதியா? என கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பரசுராமன் சிவநேசன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தனது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல்
அலுவலகத்தை திறந்து வைத்த பின் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.பரசுராமன் சிவநேசன் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்மை அடக்கி ஆழ்வது என்பது வழமையாகிய நிலையில் மாகாண ஆட்சியிலும் இது தான் நீடிக்கிறது இதனை அனுமதிக்க முடியுமா? எம்மிடம் வாக்குகள் கேட்பவர்கள் எம் இனத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை தெரிந்து அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மாறாக தென் இலங்கையின் சித்தாந்தத்தை எம் இடம் திணிப்பவர்களை அனுமதிக்கக் கூடாது இந் நிலையில் கடந்த கால நிகழ் காலங்களில் நடப்பதனை நன்கு அவதானித்துப் பாருங்கள்.
நாம் ஒரு தனி இனம் எமக்கு என தனியான மொழி கலாச்சாரம் உண்டு எவ்வளவு வறுமையானாலும் நாம் எமது இனத்தை இழந்து நின்றதில்லை. முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மதுரங்குளம், பனிச்சங்கேணி பகுதிகளில் வேடுவ இனம் இருந்ததாகவும் அவர்களை அழைத்து விழாவும் இருப்பிடமும் வழங்கி தனதாட்சியில் எம் இனத்தை இழிவான நிலைக்கு தள்ளியதை யாரும் மறக்க முடியாது. எமது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் தமிழர்களின் வாழ்விடம் இன்று வேடுவ இனத்தையும் கலந்து எமது தனித்துவத்தை இழிவுபடுத்தியவர்கள் இன்னும் எமது சமூகத்திற்கு தேவையா?
ஆட்சியில் இருக்கிறோம் அதிகாரத்தில் இருக்கிறோம் என்றவர்கள் வாகரை பேரூந்து சாலை வாழைச்சேனைக்கு மாற்றும் வரையும் அமைதியாய் இருந்து இன்றும் எவ்வித நடவடிக்கையும் இன்றி மந்தமாய் இருப்பது எதற்காக முஸ்லிம் அமைச்சர்களுக்கு பயத்திலா?
வட – கிழக்கில் யுத்தம் ஆரம்பமான நாள் முதல் இன்று வரை எமது பகுதிகளில் இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் எந்த ஒரு செயற்பாடும் முன் எடுக்காத அரச ஒட்டுக் குழுக்கள் தேர்தல் காலங்களில் வெட்டிப் பேச்சு பேசுவது எதற்காக?
எமது கூட்டமைப்பை பல வகையில் விமர்சிக்கும் தன்மை படைத்தவர்கள் ஒன்றை உணர வேண்டும். எம் இனத்தை அடக்கி வைத்து மானங்கெட்ட பிழைப்பு நடாத்த எம் தலைமை சம்மந்தன் ஜயாவோ! எமது கட்சியோ! எந்த ஒரு சூழ்நிலையிலும் சிந்தித்ததும் இல்லை செயற்படுத்தியதும் இல்லை.
அன்றும் இன்றும் பல அரச சார்பற்ற கூட்டுத் தாபனங்கள் கோறளைப்பற்று வடக்கில் ஆயுத அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இவற்றால் எமது பாரியளவான வளங்களும் நிதிகளும் சுரண்டப்படுவது பற்றி நாம் சிந்திப்பது காலத்தின் தேவை.
வாகரை பல நோக்கு கூட்டுறவு சங்கம் யாருக்காக? மக்களாகிய எமக்காக? இன்று அடி மட்டத்தில் மிகவும் வலிமையான இவ் அமைப்பை கள்ளரும், காவாலிகளும் தலைமை தாங்கும் நிலை. இது தற்போது தலைவராயுள்ளவர் பிள்ளையான் கருணா போன்றவர்களிடம் இருந்து மக்களை ஏமாற்றி பல மில்லியன் பணத்தை திருடி கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்கு சேர்ப்பதற்காய் அண்ணனையும் தேர்தலில் களமிறக்கி எம் இனத்தை அடகு வைத்தவர்கள்.
இப்படிப்பட்டவர்களை எமது பகுதியில் நிருவகிக்க வைப்பது என்பது இன்னும் பல ஆயிரம் ரூபாய்களுக்கு ஆபத்து. உங்களைப் போன்ற துடிப்புள்ள நடு நிலை இளைஞர்கள் உட்செல்வது இன்றைய நாட்களின் தேவை. இவைகளை களை எடுக்க கூட்டமைப்பை ஆட்சிப் பீடம் ஏற்றுவது மிக மிக பிரதானம்.
எமது பகுதி மீனவ சங்கங்களுக்கு மீள்குடியேற்ற காலங்களில் வெளிநாட்டு அமைப்புகளினூடாக வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் வாகனங்கள் எங்கே? ஆயுதத்தையும், அரசியல் பலத்தையும் காட்டி சுயமாக தானும் தன் குடும்பமும் அபகரித்து சுயநலத்துடன் வாழும் மாகாண சபை உறுப்பினர்கள் எமது பகுதியில் அடுத்த முறை அனுமதித்தால் எமது நிலை தான் என்ன?
அரச ஊழியர்கள் கடமையை சரிவர செய்ய வேண்டும் என கூறும் அரசியல் தலைமைகள் வாகரைப் பகுதிக்கான போக்குவரத்தை சரியாக நடைமுறைப்படுத்த மாகாண ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார்களா இல்லை. மாகாண சபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேலை செய்ய தெரியாதவர்கள் தான் கடந்த ஆட்சியில் இருந்தனர்.
பின்தங்கிய பகுதி பின்தங்கிய பகுதி என வரிக்கு வரி கூறும் முன்னாள் முதலமைச்சர் வாகரை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் என்ன செய்தார்? மாறாக குளங்கள், கொங்கிறீற் வீதி, கட்டடங்கள் அமைப்பதாக கூறி தமது கட்சி ஆதரவாளர்களால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் எதுவும் சரிவர செய்யமுடியாமல் இன்றும் பின்தங்கிய பகுதியானது தான் மிச்சம்.
இவ்வாறாக தொடர்ச்சியாக தென்னிலங்கை சிங்கள அரசுகளாலும், அரச ஆதரவு குழுக்களாலும் ஏமாற்றப்பட்டு ஒடுங்கிக் கிடந்த நாட்கள் இறந்த காலமாய் இருக்கட்டும். நிகழ் காலம் தமிழ் சமூகத்தின் உரிமை வென்று ஒடுக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி இட்டு எம் சமூகத்தின் நேர்மையாளர்கள், இளைஞர்கள் எம் இனத்தை தாங்கி நடாத்த மாகாண சபை ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவதற்று வீட்டிற்கு வாக்களிப்பது எம் ஒவ்வொருவரினதும் இன்றைய தேவையாகும்.
எம் உறவுகள் இதை நன்கு உணர்ந்துள்ளது. கடந்த கால பாலை வன நாட்களை வசந்த காலமாக்க உங்கள் ஒரே தெரிவு வீடாகட்டும் என்றார்.

No comments:
Post a Comment