( al-misfa )
தன்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை மேஜர் காப்பாற்றுமுகமாக தன்னுடைய முறைப்பாட்டினை மீளப்பெற்றிருப்பதானது அழுத்தத்தினாலேயே என்பது மிகவும் தெட்டத் தெளிவாக விளங்குகிறது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார' இந்த நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலைமைக்கு இச்சம்பவமானது மற்றுமொரு சாதாரண உதாரணம். இலங்கை ராணுவம் உட்பட
முழு நாட்டிற்குமே தெரியும் குறித்த குண்டர்களினால்தான் மேஜர் தாக்கப்பட்டார் என்று. ஆனால் தனது வாக்குமூலத்தை மேஜர் வாபஸ் வாங்கியிருக்கிறார். இது எதனால்? ஏதோவொரு அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதால்தான் அவர் இதனை வாபஸ் வாங்கியிருக்கிறார். இந்த சம்பவத்தின் ஆரம்பத்தில் மாலக சில்வா ஆயுதத்தினை மேஜரிடம் திருப்பிக் கொடுக்க முனைந்தபோது அதனை ஏற்க மறுத்திருக்கிறார் மேஜர். ஆனால் இப்பொழுது அதனை மாற்றிச் சொல்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்று.
ஒவ்வொரு ராணுவ வீரரும் இச்சம்பவத்தினால் கவலையடைந்திருக்கிறார்கள். தமக்கு சரியான நீதி கிடைக்க வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். என்றோ ஒருநாள் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்' என்று மேலும் குறிப்பிட்டார் சரத் பொன்சேகா.
'கடமை முடிவுற்ற நிலையிலும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தங்களுடன் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதியிருக்கிறது. ஆனால், தவறான முறையில் தவறான இடத்திற்கு ஆயுதத்தினை எடுத்துச் சென்றதாகவும் மேஜர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். தங்களுடைய பாதுகாப்பிற்காக உயரதிகாரிகள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு எந்தவித தடையும் கிடையாது..' என்றும் அவர் மேலும் கூறினார்.
'குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் கண் தெரியாதவர்களாகவும் காது கேளாதவர்களாகவும் இருக்கிறார்கள்' என்றும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

No comments:
Post a Comment