சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த முச்சக்கரவண்டி சாரதியும் தமிழ் உணர்வாளருமான விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் உணர்வாளரான விஜய்ராஜ் தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரச
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்ராஜ், மகிந்த ராஜபக்சவை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உயிரிழந்த விஜய்ராஜின் சகோதரர் தேவராஜ், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால் விஜய்ராஜ் தாம் எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்றும் தாம் அனைத்து தமிழின உணர்வு கொண்ட அமைப்பினருக்கும் ஆதரவாளன் என்றும் தமது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment