Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

13ம் திருத்தம் ரத்தானால் அது இந்தியாவுக்கு பெரும் அவமானம்: இலங்கை சதி!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில்,
ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஒரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை இலங்கை அரசு
 தீட்டியிருக்கிறது.

இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்காக இலங்கை அரசியல்சட்டத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமென்றால் அது இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தான் கிடைக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. இந்திய ஆட்சியாளர்களும் இந்தப் பிரிவை பயன்படுத்திதான் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தரப்போவதாக கூறிவருகின்றனர்.

ஆனால், இப்போது 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தையே அடியோடு ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக குரல் எழுப்பும்படி கூட்டணி கட்சித் தலைவர்களை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ தூண்டிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய அளவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படையாகவே கோரியிருக்கிறார்.

இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட வடக்குகிழக்கு மாநிலங்களின் இணைப்பை, இலங்கை அரசு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் தன்னிச்சையாக ரத்து செய்தது. அப்போது அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது தான் ,இப்போது 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலை கொடுத்திருக்கிறது.

13ஆவது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, இலங்கையிலுள்ள 9 மாநில எல்லைகளையும் மாற்றியமைத்து 5 மாநிலங்களாக குறைக்க ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கிறார். மாநில எல்லை மறுவரையரை என்ற பெயரில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களை துண்டு துண்டாக கூறுபோட்டு மற்ற மாநிலங்களுடன் இணைத்து, எந்த மாநிலத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவது தான் இலங்கை அரசின் திட்டமாகும்.

இதன்மூலம் இப்போது இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழர்களை மூன்றாம் தர குடிமக்களாக மாற்றுவதுடன், அவர்களுக்காக எவரும் குரல் கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்த இலங்கை அரசு முயல்கிறது.

13ஆவது அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய அரசிடம் இலங்கை அரசு அரைகுறையாக தெரிவித்திருப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை தெரிவிக்கும்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு கடிதம் எழுதியிருப்பதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசின் இந்த சதி திட்டம் நிறைவேறிவிட்டால் ஈழத்தமிழர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுவது இந்தியாவுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் ஆகும்.

எனவே, இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தைப் பறிக்கத் துடிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எந்தக்காலத்திலும் சம அதிகாரம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஐ.நா. மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment