மட்டக்களப்பு - மங்கலராமய விகாரைக்கு அருகில் இருந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்ற குறித்த விகாரையின் விகாராதிபதி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியதனால் அச்சம் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி இடம்பெயர்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு நகரில் மங்கலராமய விகாரை உள்ளது. அதன் விகாராதிபதியாக அம்பிட்டியே சுமங்கல தேரர் உள்ளார். இந்த விகாரைக்கு அருகில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு உட்பட பல வீடுகள் உள்ளது. எனினும் அவர் மட்டுமே தமிழராகவுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியதுடன் அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குறித்த விகாரையின் விகாராதிபதி குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மதில்களை அகற்றக்கோரியும் வீட்டை உடைக்ககோரியும் பல்வேறு தடவைகள் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோதும் அவர்கள் பிக்கு மீது நடவடிக்கையெடுக்காமல் தன்மீதும் தனது மனைவி மீதுமே நடவடிக்கையெடுத்ததாக தெரிவித்தார்.
பிக்குவுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியபோதும் பிக்குவுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தாங்கள் பழிவாங்கப்பட்டது தொடர்பில் பெரும் மனவேதனையடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது 35 வருட பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
நேற்று மாலை பிக்குவின் தலைமையில் கத்திகள், அலவாங்கு, பொல்லுகளுடன் சென்ற சுமார் 06 பேர் கொண்ட குழுவினர் மதில் குளியல் அறை மற்றும் சமையலறை பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் குடும்பத்தினரையும் தாக்கமுற்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி அவசர பொலிஸ் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்பகுதிக்கு வந்த பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றுள்ளனர்.
எனினும் உடனடியாக அருகில் உள்ள மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் அதற்கான முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறும் குறித்த தமிழ் பொலிஸ் அதிகாரி கோரியுள்ளார். எனினும் உயரதிகாரி இல்லையென குறித்த முறைப்பாட்டை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த பொலிஸார் அவர் இல்லையென கூறி தன்னை துரத்திவிட்டதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதவானிடம் சென்று தனது நிலைமை தொடர்பில் வாக்குமூலம் அளித்த நிலையில் பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு செல்ல தீர்மானித்ததாகவும் அந்த தமிழ் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் பிக்கு மேற்கொண்ட அட்டகாசங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீதும் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தான் தமிழன் என்ற காரணத்தினால் தனக்கு உதவ தான் கடமையாற்றும் பொலிஸாரே முன்வராதது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த குறித்த பொலிஸ் அதிகாரி, தனக்கு நேர்ந்துள்ள கொடுமைக்கு எதிராக தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான ஒரு சம்பவம் இந்த நாட்டில் உள்ள வேறு இனத்துக்கு நேர்ந்திருந்தால் இந்த நாட்டில் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனது வீட்டில் எனது பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ எல்லோரும் எனக்கு ஆதரவு வழங்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

(அத தெரண )

No comments:
Post a Comment