Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள்


நஜிமிலாஹி

ஒவ்வொரு தேர்தலிலும் அது உள்ளுர் சபைத் தேர்தலாக இருக்கலாம்மாகாண சபைத் தேர்தலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்றத் தேர்தலாக இருக்கலாம். எந்தத் தேர்தலாக இருந்தாலும்தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்கு பின்னும் பல வகையான முரண்பாடுகளையும்கட்சித் தாவல்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வரும் ஒரு சிறுபான்மை கட்சியாக
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியிலே அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பு தென்பட்ட போதிலிருந்தே முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்ளக மற்றும் வெளியக முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இந்த முரண்பாட்டின் தொடர்ச்சி தேர்தலுக்கு முன்னும் தேர்தல் காலத்திலும் தேர்தலுக்கு பின்னும் இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்கலாம்.
எனவேஇந்த முரண்பாடுகள் நீடித்துச் செல்வதற்கான சாத்தியப் பாடுகளே சமகால அரசியல் சுவாத்திய நிலையில் அதிகமாக காணப்படுகின்றன. எனவேமுரண்பாடுகளோடு பயணிக்கின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா அல்லது தற்போது கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை ஆரோக்கியமான முரண்பாடுகளாக கட்டமைத்து செயற் படப் போகின்றதாஎன்ற போக்குகளை அலசுவதுதான் இப்பத்தியின் நோக்கமாகும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு:
கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலப் பகுதியாகஜூலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையும் உள்ளது என தேர்தல் திணைக்களம் அறிவித்தது. இக்காலப் பகுதிக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற வாதப்பிரதிவாதங்களும்முரண்பாடுகளும் கட்சிக்குள் நிலவியதை நாமறிவோம். இக்காலப் பகுதி முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலப் பகுதியாக அமைந்திருந்தது.
கட்சித் தலைவருக்கும்தவிசாளருக்குமிடையில் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு மாற்று பரிமாணத்தை நோக்கி நகர்த்தப்பட்டது. இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடுவதென்றால்கடந்த 12 வருடங்களாக கட்சிக்குள் நிலவிய மயக்க நிலை முடிவுக்கு வந்தது. அதாவது முடிவெடுக்கும் அதிகாரம் அல்லது நிறைவேற்று அதிகாரம் தலைவரிடமா தவிசாளரிடமா என்பதை மௌனமாக அடக்கி வாசித்து வந்தவர்களுக்கு இதில் ஒரு தெளிவு பிறந்தது.
அந்த முடிவுதான் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவு. இதனை கட்சியின் சகல தரப்பினர்களும் வரவேற்றார்கள். கட்சிக்கு வெளியிலிருந்தும் இந்த முடிவுக்கு கனத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வடிவங்களில் இந்த முடிவை மெச்சியிருந்தது.
ஆனால்தவிசாளர் அணியினர் இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தங்களை சுதாகரித்துக் கொண்டதோடு "ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம்இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்" என்ற நிலைப்பாட்டில் பயணித்ததை நாமறிவோம்.
Hakeem-Basheerதலைவருக்கும் தவிசாளருக்கும் இடையிலான இடைவெளி: 
"சொல்லிக்கொடுத்த புத்தியும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு கூட வரும்" என்ற பழமொழியினை இவ்விடத்தில் நினைவுபடுத்தி விட்டுதவிசாளரின் முரண்பாடு என்ற விடயத்திற்கு வரலாம்.
கடந்த 2010 ஆண்டு நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தல் நீண்ட காலத்திற்கு பிறகு தவிசாளருக்கு ஒரு இனிப்பான தேர்தல் முடிவாக அமைந்திருந்தது. (ஏனெனில்கடந்த பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் தவிசாளருக்கு கசப்பான தேர்தல் முடிவுகளாகவே காணப்பட்டன) இதனால் தவிசாளர் அணியினர்அரசாங்கத் தரப்புடன் இணைவது தொடர்பாக பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அரசாங்கத்தோடு இணைவதற்கு உடன்படாது விட்டால் தவிசாளர் தலைமையிலான அணி அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகவுள்ளது என்பதையறிந்த தலைவர் அதனை தடுப்பதற்கு ஒரு உபாயத்தைக் கையில் எடுத்தார்.
கடந்த காலங்களில் காரசாரமாக மஹிந்த ராஜபக்சவை விமர்சித்து அரசாங்கத்துடன் சண்டைபிடித்து வந்த அவர், "தலைக்கு மேலால் வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன" என்ற உத்தியைக் கையாண்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில்2010 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்றது.
இதனையடுத்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியது. இதனால் தலைவருக்கு நீதியமைச்சும் தவிசாளருக்கு கூட்டுறவு பிரதியமைச்சும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கட்சிக்குள் ஏற்படவிருந்த அடுத்த பிளவையும் தடுத்து நிறுத்தியது. இதனை தலைவரின் சாணக்கியமான முடிவாக முஸ்லிம் காங்கிரஸின் ஒரு அணியினர் குறிப்பிட்டு வந்தார்கள். (இந்த அமைச்சுக்கள் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளை அடைந்தது என்பதை வேறொரு பத்தியில் பார்ப்போம்.)
இந்த அடிப்படையில் ஆரம்பித்த தலைவர்தவிசாளர் முரண்பாட்டின் அகலத்தன்மை கடந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 22ஆவது  பேராளர் மகாநாட்டிலும் எதிரொலித்தது. தவிசாளரின் உரையும் தலைவரின் உரையும் ஏட்டிக்குப் போட்டியாக அமைந்தது.
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதை தவிசாளர் பல சந்தர்ப்பங்களிலும்ஊடகங்களிலும் வெளிப்படையாக தெரிவித்து வந்தார்.
அப்போதுதான் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியும் என்ற அடிப்படையில் அலிசாஹிர் மௌலனாவை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து முதலமைச்சராக ஆக்கும் ஒரு வியூகத்தை தவிசாளர் தீட்டினார். இந்த வியூகத்தின் பின்புலத்தில் தவிசாளரின் எதிர்கால அரசியல் இருப்பு அடங்கியிருந்ததாக ஊடகங்கள் சுட்டிக் காட்டியதையும் நாமறிவோம்.
இந்த வியூகங்களை எல்லாம் முறியடித்து கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவானது தவிசாளருக்கு பலத்த அடியாக அமைந்திருந்தது.
முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏறாவூரைச் சேர்ந்த துஆ கட்சியின் தலைவர் ஹாபிழ் நஸீர் அஹமதை உள்வாங்கிகிழக்கு மாகாண சபையில் ஏறாவூரில் போட்டியிட வைத்த முடிவு,தவிசாளரின் எதிர்கால அரசியல் இருப்புக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி விடும் என எதிர்வு கூறப்பட்டது.
இதனால் தவிசாளர் கட்சிக்கு தான் வழங்கிய பங்களிப்புகளை தெரியப்படுத்துவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்தார். 
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கும் தவிசாளருக்குமான முரண்பாட்டின் உச்சவடிவமான கருத்துக்களை தவிசாளர் வெளியிட்டார். மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலும்தற்போதைய ரவூப் ஹக்கீமின் காலத்திலும் கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வியூகம் அமைத்துக் கொடுத்ததாகவும்தான் அமைத்துக் கொடுத்த வியூகங்களை கட்சி தட்டிக் கழித்த போதெல்லாம் அது தோல்வியே கண்டுள்ளது என்றும் கட்சிக்காக தனது மூளை வளத்தினையும்உழைப்பினையும்சொந்தப் பொருளாதாரத்தினையும்  அர்ப்பணித்து செயற்பட்டு வந்ததை கோடிட்டுக் காட்டினார்.
இலங்கை அரசியல் சூழலில் கட்சியின் தலைவரை விடவும் தன்னையே இந்த அரசாங்கம் கனதியாகப் பார்க்கின்ற சூழல் உள்ளது என்பதையும் தவிசாளர் வெளிப்படையாக அங்கு குறிப்பிட்டார்.
தான் செயற்படுத்த நினைத்துக் கொண்டிருக்கின்ற வியூகத்தின் ஒரு அங்கமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அலி சாஹிர் மௌலானாவை வெல்ல வைக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தினை தெரியப் படுத்தினார்.
தவிசாளரின் இந்தக் கூற்றை அவருக்கு எதிரான தரப்பு சிறப்பாகப் பயன்படுத்தியது. "உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா" என்ற அடிப்படையில் தவிசாளரின் உரையை அசுர வேகத்தில் ஊடக மயப்படுத்தினார்கள். அத்தோடு பஷீர் சேகுதாவூதின் கொடும்பாவியும் ஏறாவூரில் எரிக்கப்பட்டது. இதனால்தவிசாளரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து சென்றது.
இதனை சமாளிப்பதற்காக தவிசாளர் தனது அமைச்சு பதவியை இராஜினமா செய்தார். இந்த அமைச்சு பதவி இராஜினாமா தொடர்பிலும்தலைவருக்கும் தவிசாளருக்குமிடையிலான முரண்பாடு மேலும் ஒரு புதிய வடிவத்தைப் பெற்றது.
"தான் ஒரு நியாயமான அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பில் இருந்து கொண்டு அதனை விமர்சிப்பதை விரும்பாத காரணத்தினாலும் அமைச்சை இராஜினாமா செய்ததாக" தவிசாளர் குறிப்பிட் டார்.
அத்தோடு பஷீர் என்ற மனிதர் பதவிகளுக்கு ஆசை வைக்காதவர் என்பதை அடையாளப்படுத்துவ தற்காக இப்படியான ஒரு முடிவை எடுத்ததாக ஊடகங்களில் அறிக்கையிட்டார். கட்சி நம்பிக்கொடுத்த ஒரு பொறுப்பு குறித்து தற்றுணிவாக முடிவெடுப்பது உதிதமான தல்ல என்று தலைவர் தவிசாளரின் இராஜினாமா தொடர்பில் குறிப் பிட்டிருந்தார்.
இதனால்தான் கிழக்கு மாகாண ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கியபோது மத்திய அமைச்சில் எந்த அதிகாரங்களையும் குறைந்தது இராஜினாமா செய்த அமைச்சு தொடர்பிலும் தலைவர் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலைமைக்கு தலைவர் சென்றதற்கு முழுக்காரணம் தவிசாளர்தலைவர் முரண்பாடு என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் காரணமாக தனது தம்பியான எஸ்.எம். ரஞ்சித்தை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த எஸ்.எம். சந்திரசேனவுக்கு கடந்த மாதம் 05 ஆம் திகதி
கமநல சேவைகள் மற்றும் வனஜீவ ராசிகள் பிரதியமைச்சு வழங்கப்பட்டது. ஆனால் பஷீர் சேகுதாவூத் இராஜினாமாச் செய்த அமைச்சு தொடர்பில் இதுவரையில் எந்த சாதகமான விடயங்களும் வெளியிடப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக கட்சிக்குள் இருந்தோகட்சிக்கு வெளியில் இருந்தோ எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆய்கின்றபோதுதவிசாளருடனான முரண்பாடு முடிவுக்கு வந்து விட்டதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலுப்பெற்றுள்ளது.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது தவிசாளருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுமா என்பதை பார்த்தால் அங்கும் பிரச்சினை இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. ஏனெனில்,தற்போது ஏறாவூரைச் சேர்ந்த ஹாபிழ் நஸீர் அஹமட் கட்சிக்குள் இருந்து மாகாண சபை அமைச்சராக இருக்கின்றார்.
இதன்படி மீண்டும் கட்சிக்குள் இருந்து மத்திய அமைச்சில் ஏறாவூருக்கு இடம் வழங்கப்படுமாக இருந்தால்அது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதை காரணம் காட்டி தவிசாளரை கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து ஓரம்கட்டுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
அது தவிரதவிசாளருடன் முரண்பட்டிருக்கும் அணி மத்திய அமைச்சின் மூலம் தவிசாளருக்கு எந்தப் பதவிகளும் வழங்கப்படக் கூடாது என்பதை பலத்த பிரச்சாரமாக முன்வைப்பார்கள். இந்தப் பிரச்சாரத்தின் வடிவம் அல்லது தொனி வித்தியாசமாக இருக்கும்.
எனவேஇந்த விடயங்கள் அனைத்தும் தவிசாளரின் அரசியல் நகர்வுக்கு பாரிய தடையாகவே இருக்கப் போகின்றது. இவற்றை முறியடித்து அரசியலில் எதிர்நீச்சல் போட தவிசாளர் எவ்வகையான வியூகங்களை அமைக்கப் போகின்றார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Eastern-MPsகிழக்கு மாகாண அமைச்சர்களை நியமித்த விடயம்:
அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்தமையால் இரண்டு மாகாண அமைச்சுக்கள் அக்கட்சிக்கு வழங்கப்பட்டன. இந்த மாகாண அமைச்சுக்களில் விவசாய அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் ஹாபிழ் நஸீர் அகமட்டுக்கும்அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஜ.எம். மன்ஸூருக்கு சுகாதார அமைச்சும் வழங்கப்பட்டது. இதனால் கட்சிக்குள் அடுத்த கட்ட முரண்பாடாக இந்த அம்சம் உருவெடுத்து அதன் சூடு இதுவரைக்கும் ஆறவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த மாகாண சபைத் தேர்தலிலும் இந்த மாகாண சபைத் தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ஆகியோரை புறக்கணித்துவிட்டு புதிதாக மாகாண சபைக்குள் காலடி எடுத்து வைத்த மன்சூர் மற்றும் ஹாபிழ் நஸீர் அகமத் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கியமையானது அநீதியானது என்பதைக் காரணம் காட்டிமேற்படி இரு உறுப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டு செயற்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. காகம் திட்டிய மாடு சாகாது என்பதையறிந்த இருவரும் தாமதமாகியே ஜனாதிபதி முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இந்த முரண்பாடுகளை சரிப்படுத்துவதற்காக மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் அணிக்கு தலைமையாகவும் அன்வருக்கு சுழற்சி முறையில் கிழக்கு மாகாண அமைச்சில் இடம் வழங்குவதாகவும் கட்சி அறிவித்தது.
எது எவ்வாறாயினும்இந்த முரண்பாடுகிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இருக்கும் வரைக்கும் நீடித்துச் செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை ஆழப்படுத்தாமல் நியாயமான வாய்ப்புக்களை கட்சி செயற்படுத்த வேண்டும் என்பது சிலரது அபிப்பிராயமாகவுள்ளது. 
வாழ்வின் எழுச்சி சட்டம்:
வாழ்வின் எழுச்சி சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கிய விடயமானது கட்சிக்குள் பலத்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்தது. கட்சியின் தலைவர் நாட்டில் இல்லாத நிலையிலும் செயலாளர் ஹஸனலி வாழ்வின் எழுச்சி சட்டத்தை ஆய்ந்த பின்னரே சட்டம் தொடர்பில் தமது விருப்பத்தை தெரிவிப்போம் என குறிப்பிட்டிருந்த நிலையிலும்அவசர அவசரமாக கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாழ்வின் எழுச்சிக்கு ஆதரவு வழங்கினார்கள்.
சிறுபான்மை இனத்திற்கு பாதகமான சட்டமாக இந்த சட்டத்தை கட்சிக்குள் இருக்கும் முக்கியமான சிரேஷ்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தும் அதனை கவனத்திற் கொள்ளாது,முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பின்புலம் என்ன என்று பலரும் இன்று வரைக்கும் அங்கலாய்க்கும் நிலை காணப்படுகின்றது. மாகாண சபை அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் படல் மற்றும் நிதிகையாள்கையின்போது வெளிப்படைத்தன்மை இல்லாமல் போதல் போன்ற விடயங்கள் இந்த சட்டத்திற்குள் இருப்பதனால்இந்த சட்டம் தொடர்பான விமர்சனப் பார்வை சூடுபிடித்திருந்தது. கட்சியின் பிரதிச் செயலாளரும் பிரபலமான சட்டத் தரணியுமான நிசாம் காரியப்பர் இந்தச் சட்டத்தின் பாதகங்களை தெளிவாக விளக்கியிருந்தார்.
மேற்படி சட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே சூடுபிடித்திருந்த நிலையில் அது தொடர்பான எந்த விளக்கங்களும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்காமல் கட்சி நடந்து கொண்ட விதத்தை புத்திஜீவிகளும் விமர்சித்திருந்தார்கள்.
சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் படி தலைவர் அமெரிக்காவிலிருந்த பொழுது தமக்கு குறுஞ் செய்தி அனுப்பியதாக கிழக்கு மாகாண சபை அணித் தலைவர் ஜெமீல் குறிப்பிட்டார். இதனை தலைவர் நிராகரித்திருந்தார். இந்த சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கிய விதம் தொடர்பில் கட்சி விசாரணை நடாத்தி வருவதாக குறிப்பிட்டார். இந்த விசாரணை தொடர்பான விடயங்கள் அடங்கிய தகவல்கள் இதுவரைக்கும் வெளியிடப்படவில்லை. இதனால் கட்சியின் வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்வி ஊடகங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வாழ்வின் எழுச்சி தொடர்பான முரண்பாடு கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் பிரதேச,மாகாண மற்றும் தேசிய மட்டம் வரையிலும் நிலவுவதை நாம் அவதானிக்கலாம். நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது சட்ட ஆக்கங்களும் முக்கிய இடத்தைப்பிடித்திருந்தது.
இந்நிலையில் தற்போது 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை அகற்றக் கோரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அல்லது அதன் முடிவுகள் முரண்பாடுகளுடன் கலந்த நிகழ்வாகத்தான் இருக்கப் போகின்றதா அல்லது சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டங்களை முரண்பாடுகளின்றி அரசாங்கத்துடன் இணைந்திருந்து எவ்வாறு கையாளப் போகின்றது என்பன பெருத்த முரண்பாடுகளாகத்தான் இருக்கப் போகின்றது.
பிரதேச அரசியல் முரண்பாடு:
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல்பிரதேச ரீதியிலான முரண்பாடுகளை தீவிரப்படுத்தி யுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பிரதேச ரீதியான முரண்பாடுகள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி அரசியல் ரீதியாக வலிமை பெற்றபோது அதனோடு சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.
பிரதேச ரீதியிலான முரண்பாடுகள் ஆசனங்களை தக்க வைப்பதில் பங்களிப்புச் செய்தாலும்அதன் பின்னரான அரசியல் நகர்வுகள் சமூக அரசியலுக்கு தடையாகவே இருந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இந்த வகையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டபோது பிரதேச ரீதியான முரண்பாடுகளும் கூடவே தெரிவாகி விட்டது. அம்பாறை,திருகோணமலைமட்டக்களப்பு என்ற மூன்று மாவட்டங்களிலும் தொகுதி ரீதியான பிரதேச முரண்பாடுகள் உச்சநிலையை அடைந்துள்ளது என்பதை தேர்தலுக்கு பிந்திய அரசியல் நிலைமைகள் சுட்டி நிற்கின்றன.
சமகாலத்தில் முஸ்லிம் அரசியலில் அதிகாரங்கள் தொகுதி ரீதியாகபிரதேச ரீதியாக நிறுவப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு முஸ்லிம் வாக்காளர்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கையாளப் போகின்றது. இதற்கான நிவாரணம் எப்படி அமையப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி மீள்பார்வை.

No comments:

Post a Comment